வெருகலில் குடியமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் 5 நாட்களில் விரட்டியடிப்பு

Posted by muhiloosai muhiloosai
Options
திருகோணமலை மாவட்டம் வெருகலில் 75 முஸ்லிம் குடும்பங்கள் கடந்த 13 ஆம் நாள் மீளக்குடியமர்த்தப்பட்டதாக அரசாங்கம் 'அரசியல் கண்காட்சி' ஒன்றை நடத்திய போதும் ஈச்சிலம்பற்று பிரதேச செயலர் அந்த மக்களை அவர்களது இடங்களில் இருந்து துரத்தியடித்து விட்டார் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் அப்துல் மஜித் தலைமையில் முஸ்லிம் குடும்பங்களை வெருகலில் மீளக்குடியமர்த்தும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

வெருகல் பிரதேச செயலரும் அப்பகுதி மதகுருவும் அதில் கலந்துகொண்டிருந்தனர். "ஆனால் 5 நாட்களின் பின்னர் இந்த அரசியல் கண்காட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் ஈச்சிலம்பற்று பிரதேச செயலரால் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள் என எண்ணுகின்றேன்" என்றார் ஹக்கீம்

முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டிருப்பது, இடம்பெயர்ந்தோரை அரசு மீளக்குடியமர்த்துவதாக உலகத்திற்குக் காட்டும் ஒரு செயல் மட்டுமே. அதைவிட முக்கியமானது ஒழுங்கான முறையில் திட்டமிடப்பட்ட மீள்குடியமர்வு நடவடிக்கைள் என்றார் ஹக்கீம்.
 
மன்னார் மாவட்டம் முசலியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என நாடாளுமன்றத்தில் தான் உரையாற்றியதை அடுத்து, மீள்குடியமர்வு மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் றிசாத் பதியுதீன், 450 குடும்பங்களை அழைத்துச் சென்று அந்தப் பகுதியில் மீளக்குடியமர்த்தியுள்ளார் எனவும் தெரிவித்தார் அவர்.
 
கடந்த 20 ஆம் நாள் முசலியில் உள்ள 15 கிராமங்களில் அந்த மக்கள் தற்காலிகத் தங்கும் இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் வருமானம் எதனையும் ஈட்டிக்கொள்ள வழியின்றித் துன்பமடைந்துள்ளனர் என ஹக்கீம் மேலும் குற்றம் சாட்டினார்.
 
குழந்தைகள் கூட படையினரால் காணொலி பதிவிற்கு ஆளாக்கப்பட்டனர் எனக் கூறிக் கவலைப்பட்ட ஹக்கீம், மக்களின் நடமாட்டத்திற்னெ அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறையும் அங்கு தொடங்கப்பட்டுள்ளது என்றார். இது அவர்களின் நடமாட்ட சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அப்பகுதியில் இருக்கும் தமிழ் மக்கள் மீது இத்தகைய கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்படவில்லை என்றும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
 
முசலி பகுதி முஸ்லிம்கள் எந்தக் கட்டப்பாடுகளும் இன்றி தமது வயல்களுக்கும் மீன்பிடித் தொழிலுக்கும் சென்று வருவதற்காகவது அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.