ஒரு கோடி வாக்காளர் அட்டை அச்சடிக்கக் கையளிப்பு : தபால்மூல வாக்களிப்பு 25,26இல்

Posted by muhiloosai muhiloosai
Options
பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதிபெற்றுள்ள ஒருகோடியே 88 லட்சத்து 44 ஆயிரத்து 500 பேருக்கான வாக்காளர் அட்டைகளும் அச்சடிப்பதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்திடம் ஒரேநாளில் கையளிக்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அட்டைகளை அச்சடிக்கும் நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. அதேவேளை, ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறும்.

வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டதன் பின்னர் அவற்றை ஒரே நாளில் தபால் திணைக்களத்திடம் கையளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலின் போது, வாக்காளர் அட்டைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காமையினால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகச் சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்தே வாக்காளர் அட்டைகளை ஒரேநாளில் தபால் திணைக்களத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொதுத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை விடவும் பொதுதேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைவானது என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2008 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மேற்கொள்ளப்படவிருப்பதனால் வாக்காளர் அட்டைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு நாட்களுக்குள் விநியோகித்து முடிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.