சுயநிர்ணய அடிப்படையில் தமிழருக்கு கூட்டமைப்பின் தீர்வு

Posted by muhiloosai muhiloosai
Options
சுயநிர்ணய அடிப்படையில் ஐ.நா.சபை நெறிமுறை ஊடாக உருவாக்கப்பட்ட மனித குழுமங்களுக்கு அதிகாரங்கள் என்ற ரீதியில் இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாரித்துள்ளதாக அதன் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கை அரசாங்கம் நாடுபூராக சிங்களதேசவாதத்தை உருவாக்கி வருகின்றது. தற்போது மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத் தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து இடம் பெயர்ந்த நிலையில் அங்கு கடற்படையினருக்காக ஆயிரம் வீடுகளையும் முகாம்களையும் கட்டுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இதேபோன்றுதான் கிளிநெச்சி, முல்லைத் தீவுப் பிரதேசங்களில் துரிதமாக இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள் குடியேற்றுவதாக கூறி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது முரணான விடயம் ஆகும்.

இத்தகைய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் ஆகிய இணைந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதேவேளையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கை அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள், ஆதரவாளர்கள் மற்றும் சிங்கள உல்லாசப்பயணிகள் ஆகியோ ருக்கு தனிநபருக்கு 15ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கி இலங்கை இராணுவத்தால் மீட்டெடுக்கப்பட்ட யாழ்ப்பாணம், வன்னிப் பிரதே சங்களை பார்வையிட்டு வருமாறு அனுப்பி வைக்கின்றது.

கடந்த அரச தலைவர் தேர்தலில் அலரிமாளிகையில் அன்னதானமும் வழங்கியது.தேர்தல் காலங்களில் இவ்வாறான அரசியல் நாடகங்களை சிங்கள மக்கள் மீது அரங்கேற்றுவதன் ஊடாக சிங்கள மக்கள் ஆளும் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

உல்லாசப் பயணம் என்ற ரீதியான சிங்கள மக்களின் யாழ்ப்பாணம் நோக்கியதான படையெடுப்பால் சுகாதாரச் சீர்கேடுகள், போக்கு வரத்து நெரிசல்கள், இடநெருக்கடிகள் என்பன பாரிய பிரச்சினையாக தலைவிரித்தாடுகின்றது.

இவற்றை யாழ்.மாநகரசபையால் கட்டுப்படுத்த முடியாதுள்ளது. அரசியல் இலாபத்துக்காக அதிக செலவு செய்யும் அரசு அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களிற்கு செலவுசெய்கின்ற அரசாங்கம் இடம்பெயர்ந்து அகதிகளாக உள்ள மக்களுக்கு இப்பணங்களை பயன்படுத்தியிருந்தால் மக்கள் ஓரளவு பயனடைந்திருப்பார்கள்.

தமிழ்த் தேசியத்துக்கானமக்கள் முன்னணி

இந்நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியை தற்போது உருவாக்கியுள்ளது. இக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசம், தேசியம் ,இறையாண்மை, சுயநிர்ணய உரிமை இவை எல்லாவற்றையும் கைவிட்டுச் செல்வதாக குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஐ.நா.சபையின் நெறிமுறைக்கு ஊடாக உருவாக்கப்பட்ட மனித குழுமங்களுக்கு இருக்கக் கூடிய அதிகாரங்களின் அடிப்படையில் இலங்கை தமிழ் மக்களுக்கு முழுமையான சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதை அடிப்படையாக கொள்கிறது.

அந்த சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை தயாரித்துள்ளது.1978ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இருந்தும், கூட்டணியூடாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடாகவும், பல் வேறுபட்ட இயக்கங்கள் ஊடாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக இது நிலைநிறுத் தப்பட்டு வந்திருக்கின்றது என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கிறோம்.

தேசம், தேசியம் பற்றி கூறுபவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கேள்வி கேட்கின்றது. நீங்கள் போட்டியிடும் யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்டங்கள் மாத்திரம் தான் தமிழ் மக்களின் உடைய தேசமா? நீங்கள் ஏன் வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடவில்லை.

யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் ஒருசில நபர்களை தோற்கடிப்பதுதான் உங்களது தேசிய சிந்தனையா? திருகோணமலையில் ஒருவர் மட்டும் தெரிவு செய்யப்படக்கூடிய நிலையில் நீங்கள் போட்டியிடக் கூடியதானது வெறும் சம்பந்தனை மாத்திரம் அல்ல ஒட்டுமொத்தமாக தேசியத்தையும் தோற்கடிப்பதற்காகவா?

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதுதான் நீங்கள் கூறுகின்ற தேசியமா? திருகோணமலை மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் பறிபோகாமல் இருப்பதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம் தமிழரசுக் கட்சிக்கு எதிராக போட்டியிடாமல் தவிர்த்துக் கொண்டார் இதனைச் கூட விளங்கிக் கொள்ளாமல் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு கஜேந்திரகுமார் போட்டியிடுவது ஆனது ஒட்டுமொத்த தேசியத்தை அழிப்பதற்குச் சமனாகும்.

100க்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்கள்

வடக்குக் கிழக்கில் என்றும் இல்லாத வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயேட்சைக் குழுக்களை அரசாங்கம் தேர்தல் களத்தில் இறக்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டனர். தமிழ் மக்களுக்கான கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படமாட் டாது என்ற நோக்கத்திற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகின்றது என சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.