லசந்த படுகொலை:விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

Posted by muhiloosai muhiloosai
Options
படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் விசாரணைகள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் 18ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கல்கிசை பிரதான நீதிமன்ற நீதவான் ஹர்ஷ சேதுங்க இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

லசந்த விக்ரமதுங்க கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் படுகொலை இடம்பெற்ற நேரத்தில் அப்பகுதி தொலைத் தொடர்புக் கோபுர வலைக்குள் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்று இடம்பெற்றன. சந்தேக நபரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைப்பதற்கான அனுமதியினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் கோரினர்.

அதற்கு அனுமதியளித்த நீதவான், இதுவரையான விசாரணைகள் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பணித்தார்.