சரத் பொன்சேகாவைக் கைது செய்து இழுத்துச் சென்ற மேஜர் ஜெனரல் மானவடு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

Posted by muhiloosai muhiloosai
Options
முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கைதுசெய்தது, அவருடன் முன்விரோதமாக இருந்த மேஜர் ஜெனரல் மானவடு. முன்னாள் ராணுவத் தளபதி என்றுகூட மதிப்பளிக்காமல் சரத்தை மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேசி, இழுத்துச் சென்றதால் மானவடுவின் செய்கை முரண்பாடுகளுக்கு உட்பட்டிருந்தது.

சரத் பொன்சேகாவின் கைதில் ஈடுபட்ட ராணுவத்தினரிடன் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் நடத்திவரும் நிலையில் அடுத்ததாக மானவடுவே விசாரணைகளுக்கு உள்ளாக இருந்தார். ஆனால் அவரோ தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று நாட்டைவிட்டே வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

மானவடு சரத் பொன்சேகாவைக் கைதுசெய்த விதம் குறித்து ராணுவத்திலுள்ள பலரும் தமது அதிருப்தியைத் தெரிவித்திருந்தனராம். சில சிரேஷ்ட அதிகாரிகள் வெளிப்படையாகவே அவரின் நடத்தைபற்றி, தூற்றுவதற்குப் பெயர்போன உடுகம்பொலவையே மானவடு மிஞ்சிவிட்டார் எனக் கூறியிருந்தனராம்.

இதையடுத்து, மானவடு ராணுவ மற்றும் பொது மக்களைச் சந்திப்பதையே தவிர்த்துவந்தார். இப்போது இவருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் சிப்பாய்களும் மிகவும் பின்வாங்குவதால் அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும், இதற்கு ஜனாதிபதிச் செயலாளர் உதவிபுரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனுமே, அரசாங்கம் மற்றும் அதன் உயர் அதிகாரிகளின் உதவியுடன் மானவடு தனது குடும்பத்தினரை வேறொரு நாட்டுக்கு அனுப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.