காவல் நிலையமாக மாறிய புலிகளின் தளம்

Posted by muhiloosai muhiloosai
Options
இலங்கையில் வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தளங்களில் ஒன்றான பூனார்யன் தளம் தற்போது காவல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையம் கடந்த திங்கள் கிழமை திறக்கப்பட்டது.

யாழ்ப்பாண உப்பு நீர் ஏரியின் தெற்கு கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடுதலைப் புலிகளுக்கு பூனார்யன் தளம் மிகவும் உதவியாக இருந்தது.

பூனார்யன் தளம் ஏ 32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலை 98 கி.மீ. நீளம் கொண்டது. இது 1988 ம் ஆண்டு மூடப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையால் இந்த நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி இந்த சாலை மூடப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி 22 ம் தேதி தான் மீண்டும் பயணிகள் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

ஏ 32 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 5 வது காவல் நிலையம் பூனார்யன். இது நாட்டின் 423 வது காவல் நிலையம் ஆகும் என்று ஐ.ஜி. மகிந்த பாலசூர்யா தெரிவித்தார்.

இந்த பகுதியில் குடியேறி உள்ள 10 ஆயிரம் தமிழ் அகதிகளுக்கு உதவியாக இந்த காவல் நிலையம் செயல்படும் என்று அவர் கூறினார்.

அடுத்த 6 மாத காலத்தில் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில் 8 காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

இலங்கையின் வட பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கு காவல், வரி வசூல், ஆட்சி நிர்வாகம் என எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளே செய்து, அரசாங்கம் நடத்தி வந்தனர்.