நாட்டின் உண்மையான அரச தலைவர் பதவியேற்கும் வரை போராட்டம் தொடரும்: ஜே.வி.பி

Posted by Kavi Kavi
Options
பொன்சேகாவே நாட்டின் உண்மையான தலைவர் ஆனால் அரசு அவரின் வெற்றியை கொள்ளையிட்டுள்ளது எனவே பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு நாட்டில் உண்மையான அரச தலைவர் பதவியேற்கும் வரையிலும் நாம் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என ஜே.வி.பி தலைவர் சோமவன்சா அமரசிங்கா தெரிவித்துள்ளார்.

நேற்று (16) ஜே.வி.பி கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசு கொள்ளையடித்துள்ள வெற்றியை கொண்டாடுவதற்கு நாம் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை. அரசு மேற்கொண்ட முறைகேடுகள் தொடர்பான ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

அரசு மேற்கொண்ட முறைகேடுகள் வரலாற்றில் பதிவாகும். நாம் விரைவில் மக்களை வீதிகளில் இறக்கி அரசின் முறைகேடுகளுக்கு எதிராக போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நேற்று நடைபெற்ற பேரணியின் போது ஜே.வி.பி தலைவர்கள் உரையாற்றுவதற்கு வசதியாக ஆதரவாளர்கள் நடமாடும் மேடை ஒன்றை அமைப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் காவல்துறையினர் அதனை தடுப்பதில் வேகமாக செயல்பட்டு வந்தபோதும், ஜே.வி.பி தலைவர்கள் விரைவாக வந்து மேடையேறியதால் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.