புல்மோட்டையில் இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Posted by Kavi Kavi
Options
இடம்பெயர்ந்த மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்திய மருத்துவர்களால் திருகோணமலை புல்மோட்டையில் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்தில் இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக சென்றிருந்த இடம்பெயர்ந்த மக்கள் அந்த பிரதேசத்தில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பியதை அடுத்து இந்த சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரதேசம் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான பிரதேசம் எனவும் திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையில் மேற்கொள்ளும் திட்;டத்தின் ஒரு பகுதியாகவே இந்த சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துரைரட்ணசிங்கம் மேலும் கூறியுள்ளார்.
 
மேலும் நான்கு வருடங்கள் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை எனவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் தீர்மானம் ஜனவரி 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
 
தமது கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 10 நிபந்தனைகள் குறித்து மகிந்த ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேக்கா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த பேச்சுவார்த்தைகளில் சரத் பொன்சேக்கா சாதகமான பதிலை வழங்கியதாகவும் துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். தமது நிபந்தனைகள் தொடர்பாக இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும்  தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.