இந்தோனேசிய தமிழ் அகதிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

Posted by Kavi Kavi
Options
இந்தோனேசியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளில் ஒருவர் நேற்றைய தினம் மருத்துவ மனையில் வைத்து ஐ.ஓ.எம் மற்றம் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளினால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
ஜி.சரவணன் என்ற 30 வயது இளைஞனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். கடந்த 23ம் திகதி புதன்கிழமை 2009 கப்பலில் தங்கியிருக்கும் எஸ்.பிரபாகரன் (45) என்பவர் கடுமையான சுகயீனம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவருக்கு துணையாக சென்று நோயாளிக்கு உதவியாக தங்கியிருந்த வேளையில் இவ்வாறு காரணம் எதுவும் இன்றி கடத்திச் செல்லப்பட்டமை அகதிகளிடத்தில் பெரும் அச்சத்தை தோற்றுவித்திருக்கின்றது.

மேலும் நேற்றைய தினம் வைத்திய சாலையில் ஐ.ஓ.எம் மற்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் தலையீடும் தொந்தரவும் வழக்கத்தை விட  அதிகமாக காணப்பட்டதாகவும் மருத்துவமனைக்கு சென்று வந்தவர்கள் கூறியுள்ளார்கள்.

எழுந்து நடக்க இயலாமல் கடுமையான நோய் தாக்கத்துக்குள்ளாகி படுக்கையில் இருக்கும் நோயாளியின் படுக்கையை பலமுறை பிரட்டி போட்டு பரிசோதனையும் செய்துள்ளார்கள்.

நிச்சயமாக ஓய்வு வேண்டும் என மருததுவர்கள் எச்சரித்தும் நோயாளியை ஓய்வாக இருக்க விடவில்லை எனவும் இதன் மூலம் அந்நோயாளி மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடத்திச் செல்லப்பட்டவரை ஐ.ஓ.எம் மற்றும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் நேற்று இரவு 8மணி அளிவில் கப்பலுக்கு கொண்டு செல்வதாக கூறி நோயாளிக்கு உதவ கூட அனுமதி அளிக்காமல் அழைத்துச் சென்றுள்னர்.

ஆனால் குறிப்பிட்ட அந்நபர் இன்னும் கப்பலுக்கு வந்து சேரவில்லை சம்பந்தபட்ட அதிகாரிகளும் இதுபற்றி எந்த விளக்கமும் கப்பலில் உள்ளவர்க்கு அளிக்கவில்லை. இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க பயந்தே பல நோயளிக்ள மருத்துவ மனைக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

ஆட்கடத்தல், அரசியல் படுகொலைகள், கப்பம் கோருதல் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு பயந்து அதற்காகவே பெரும் துன்பங்களை எதிர்நோக்கி பயணம் செய்து இன்று இந்தோனேசிய அரசாங்கத்தின் பிடியில் சிக்கியுள்ள அகதிகள் இங்கும் ஆட்கடத்தலா! என அச்சம் படுகின்றமையோடு உளவியல் தாக்கத்திற்கும் உள்ளாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் விடுமுறை காரணமாக அகதிகள் விடயத்தில் சர்வதேச நாடுகளின் செய்தி நிறுவனங்களின் பார்வை அருகி இருப்பதாக உணரப்படுவதால் அதிகாரிகளின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படலாம் என கடந்த 18-12-2009 அன்று கப்பலின் அகதிகள் செய்தி ஊடகங்களுக்கு வெளியிட்ட  ஊடக அறிக்கையை இச்சம்பவத்தை உறுதிபடுத்துவதாகவே அமைகின்றது