ஜி.எஸ்.பி. சலுகையைப் பெற இலங்கை தொடர்ந்து முயற்சி

Posted by Kavi Kavi
Options
இலங்கைக்கான "ஜி.எஸ்.பி." வரிச்சலுகையை இடைநிறுத்தும் முடிவை எடுத்தமைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக.. சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணம் எதுவும் இலங்கைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள இலங்கை அரசு தொடர்ந்தும் இச்சலுகையைப் பெறுவதற்கான பேச்சுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை "ஏசியன் டிரிபியூன்" இணை யத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக எந்தச் சட்ட நடவடிக்கையையும் எடுக்கப்போவ தில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. முக்கியமான விடயம் என்னவென்றால், "ஜி.எஸ்.பி." வரிச்சலுகையைப் பெறுவது தொடர்பாக பிரஸல்ஸில் உள்ள அதிகாரிகளுடனும், இலங்கையில் உள்ள தூதரகத்துடனும் பேச்சுகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதே  என மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக சர்வதேச வர்த்தக அமைச்சர்  பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தமை வெறுமனே கருத்தே என மேலும் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு முன்வைக்கவுள்ள செயற்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசின் மனித உரிமை தொடர்பான செயற்திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முன்னெடுக்கப்படவேண்டிய தந்திரோபாயங்கள் குறித்துத் தெரிவிக்கின்றது. மனித உரிமை விடயங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கான எமது அர்ப்பணிப்பை இது புலப்படுத்தும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து சாதகமான சமிஞ்ஞைகள் வெளிவருகின்றன என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் ஐரோப்பிய ஒன்றியத்தின் இறுதி முடிவு பெப்ரவரி மாதத்திலேயே வெளியாகும், மேலும் அதனை நடைமுறைப்படுத்த ஆறு மாதங்களாகும், எனவே மனித உரிமை நிலைவரத்தை முன்னேற்றுவது குறித்த எமது கடப்பாட்டை புலப்படுத்துவதற்கு ஓகஸ்ட் வரை கால அவகாசம் உள்ளது  என்றார்.
இது இவ்வாறிருக்க,  இலங்கையின் உத்தேச சட்ட நடவடிக்கைத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசிடமிருந்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் பேர்னார்ட் சவேஜ் தெரிவித்துள்ளார்.