உள்நாட்டுக்குள் உருவாக்கப்படும் தீர்வு குறித்து பூர்வாங்க ஆராய்வு

Posted by Kavi Kavi
Options
பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றும் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுகள் நடைபெற்றன.

நேற்று முற்பகல் நடைபெற்ற இந்தப் பேச்சுகளில் ஜெனரல் பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் எதிரணித் தரப்பில் பங்குபற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் இப்பேச்சுகளில் கலந்துகொண்டனர்.      

கொழும்பு  07, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் நேற்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை இந்தப் பேச்சுகள் இடம்பெற்றன எனத் தெரியவருகின்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கி,  அவர் அத்தேர்தலில் வெற்றிபெற்றால், அவரது அரசு தமிழர் விடயத்தில் கைக்கொள்ளக்கூடிய போக்குக் குறித்து இந்தப் பேச்சுகளில் ஆராயப்பட்டதாகத் தெரிகின்றது.

தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளின் விவகாரம், அகதிகள் மீள்குடியமர்வு, அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி அங்கு மக்களை மீளக் குடியமர அனுமதித்தல் என்பன பற்றியும் விரிவாகப் பேசப்பட்டதாகத் தெரியவந்தது.
இலங்கை இனப் பிரச்சினைக்கு  வெளிநாட்டுத் தலையீடின்றி  உள்நாட்டுக்குள் உருவாகும் தீர்வு குறித்து வலியுறுத்தப்பட்டு வருகின்றமையால், அது குறித்தும் இரு தரப்பிலும் விரிவாக ஆராயப்பட்டது எனத் தெரிகின்றது.

உள்நாட்டுக்குள் உருவாகும் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக ஏற்கனவே இனப்பிரச்சினை விவகாரத்தை ஒட்டி இங்கு முன்வைக்கப்பட்ட சில திட்டங்களைக் கவனத்தில் எடுத்துப் பரிசீலிக்கவும் நேற்றைய சந்திப்பில் உடன்பாடு காணப்பட்டதாகத் தெரியவந்தது.

* ஜனாதிபதி பிரேமதாஸ காலத்தில் மங்கள முனசிங்க தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்ட யோசனைத் திட்டங்கள்.
* 2000 ஆம் ஆண்டில் தீர்வுக்கான உத்தேச திட்டமாக அப்போதைய சந்திரிகா அரசு தயாரித்துப் பிரேரித்த தீர்வு யோசனைகள்.
* 2002 இல் ரணிலின் அரசு விடுதலைப் புலிகளுடன் நடத்திய பேச்சுகளை அடுத்து எட்டப்பட்ட ஒஸ்லோ கூட்டறிக்கை இணக்கம்.
 * தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக நியமித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் சம்பந்தப்பட்ட புத்திஜீவிகள் குழு தயாரித்து சமர்ப்பித்த தீர்வுத் திட்ட யோசனை நகல்.


இத்தகைய நான்கு முக்கிய அம்சங்களையும்  அடிப்படையாகவும்,  பிரதான ஆவணங்களாகவும் வைத்துக்கொண்டு உள்நாட்டில் தயாரான தீர்வுத் திட்டம் ஒன்றை எட்டுவதற்கு முயற்சிக்கலாம் என்று நேற்றைய சந்திப்பில் இணங்கப்பட்டதாகவும் அறிய வந்தது. மேலும் தொடர்ந்து பேச்_ நடத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.