வவுனியா முகாம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : சிவசக்தி ஆனந்தன்

Posted by Ozone Ozone
Options
வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் சிலர் மறுபக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மீது ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வவுனியா இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று தமது உற்றார் உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இத்தருணத்தில், தமது இன்ப துன்பங்களைப் பக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்ததைக் கவனித்த இராணுவத்தினர் அம்மக்கள் மீது மூர்க்கத்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த மக்களை முழந்தாளிட வைத்தும், மண்மூடைகள், முட்கம்பிச் சுருள்கள், கம்பிக்கட்டைகள் ஆகியவற்றைத் தலையில் சுமக்க வைத்தும் தண்டித்துள்ளனர்.

முகாமிலுள்ள மக்களை உள்ளக இடம்பெயர்ந்தோராக வெளியுலகுக்குக் காண்பிக்கும் இலங்கை அரசாங்கம், எமது மக்களைக் கைதிகளைப் போன்று நடத்துவதைக் கைவிடவேண்டும்.

மேலும், தாங்கள் விரும்பிய பொழுதெல்லாம் குளித்துத் துணி துவைத்த இம்மக்கள் இன்று இருபது லிட்டர் தண்ணீருக்காக பத்து பதினொரு மணித்தியாலங்கள் வரை வரிசையில் நிற்கவேண்டியுள்ளது.

இதனால், பெரும்பாலான மக்களின் இரவுகள் முகாம்களிலுள்ள கூடாரங்களுக்கு வெளியே குழாய்க் கிணற்றுக்கருகில்தான் கழிகின்றது. இதற்குத் தக்க மாற்று ஏற்பாட்டினை அரசாங்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.