வவுனியா ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by muhiloosai muhiloosai
Options
கொழும்பு கோட்டைக்கும் வவுனியா – தாண்டிக்குளத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதையடுத்து, இந்த ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து மாத்தறைக்கு அதிகாலை 3.15 மணிக்கு ஒரு ரயில் புறப்படுகின்றது. இது மாத்தறைக்குச் சென்று பிற்பகல் 2.00 மணிக்கு கோட்டைக்குத் திரும்பி வந்து அங்கிருந்து வவுனியா நோக்கி 2.05 மணிக்கு வவுனியா நோக்கிப் புறப்படுகின்றது. அதிகாலை 5.45 மணிக்கு வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் கடுகதி ரயிலானது, பிற்பகல் 4.20 மணிக்கு கொழும்பிலிருந்து மீண்டும் வவுனியா நோக்கிப் புறப்படுகின்றது.

அதேவேளை, அதிகாலை 5.45 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து வவுனியா – தாண்டிக்குளம் நோக்கிப் புறப்படுகின்ற யாழ்தேவி கடுகதி ரயிலானது, பகல் 12 மணிக்கு வவுனியா – தாண்டிக்குளத்தை வந்தடைந்து மீண்டும் கொழும்பு நோக்கி பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படுகின்றது.

இந்த கடுகதி ரயிலானது கொழும்பிலிருந்து வரும்போது மதவாச்சியில் பயணிகள் ரயிலில் இருந்து இறக்கி சோதனையிடப்பட்டதன் பின்பே பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகின்றது. ஆயினும் இந்த ரயில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கித் திரும்பும் போது மதவாச்சியில் சோதனையிடப்படுவதில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு காலையில் புறப்படுகின்ற பஸ்களில் வவுனியாவுக்குச் செல்பவர்கள், இந்த யாழ்தேவி கடுகதி ரயில் மூலம் கொழும்பு செல்வதற்குத் தற்போது வசதி ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.